பல்லவர் முதலாம் மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் காசுகள் உலோகம்:வெண்கலம் முதலாம் நரசிம்மவர்மன் (பொ.ஆ. 630 - 668)
முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு அவனது மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றான். இவன் மாமல்லபுரத்தில் குகைக்கோயில்களை அமைத்ததன் மூலம் மாமல்லன் என்றும் , சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்றதன் மூலம் வாதாபி கொண்ட நரசிம்மன் என்றும் வழங்கப்பட்டான். இவன் காலத்திலேயே சீனப் பயணி யுவான்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார்.. முதலாம் நரசிம்மவர்மன் காசுகள் காசின் முன்புறம் வழக்கம் போன்று பல்லவ அரசின் சின்னமான திமிளுடைய காளை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் முதலாம் நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்களான ஸ்ரீபர, ஸ்ரீநிதி போன்ற விருதுப்பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சில காசுகளில் நிற்கும் சிங்க உருவம்,அதன் மேற்புறம் திரிசூலம், அதன் கீழ் பன்றி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. காசின் பின்புறம் நெடுக்கு வாக்கில் இரு மீன்கள், குறுக்கு வாக்கில் ஒரு மீன், நான்கு ஆரங்களை உடைய சக்கரம், பல ஆரங்களை உடைய சக்கரம், துறைமுகம் போன்ற உருவப் பொறிப்பு ஆகியவை இடம்பெறும். இரண்டாம் நரசிம்மவர்மன் காசுகள் இரண்டாம் நரசிம்மவர்மன் (பொ.ஆ.690-729) காசுகள் மேற்குறிப்பிட்ட முதலாம் நரசிம்மவர்மன் காசுகளைப் பெருமளவு ஒத்துள்ளன. இக்காசுகளின் முன்புறம் இரண்டாம் நரசிம்மவர்மனின் விருதுப்பெயர்களான ஸ்ரீநிதி, ஸ்ரீபர ஆகியவை பல்லவ கிரந்த எழுத்துப்பொறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. |